Thursday, August 23, 2012

ஒரு துளி புன்னகை



நீயில்லாமல் புன்னகைக்க
கற்றுக்கொண்டேன் - ஆனாலும்
காட்டிக்கொடுக்கிறது
கண்ணீர் ...

Thursday, July 26, 2012

உன்னைப் போல் ஒன்று ...


வானம் தாண்டி
வந்த அடைமழையின் ,
கடைக்குட்டியான சாரல் ஒன்று -
என் ஜன்னல் கம்பி தாண்டி,
எனது கையின் மேல்
கிளிப் பிள்ளையாய் அமர்ந்து -
அசைவற்றுப் பார்த்தது எம்மை ... - உன்னைப் போலவே !
பிரியமுடன் அது பிரியா விடையும் பெற்றது.  பின் ,
இடியுடன் கூடிய கனத்த மழை - என்
இதயத்தில் !!!

Wednesday, July 25, 2012

நேற்று என் மரணம் ...



வாசலில் செருப்புகள்

வானளவு உயர ...

வந்திருந்த சொந்தங்கள்

வண்ண வண்ண நாற்காலிகளில் அமர ...

வட்ட மேஜை மாநாடு நடக்கின்றது ...

வளராத இளம் வாண்டுகள்

வண்டுகளை போல் இங்குமங்கும்

வட்டமிட ...

வாசலுக்கு உள்ளே

வாசனை வத்திகள்

வயது வந்த பூக்களோடு புணர

வாரிக்கொண்டைனைத்து அழுத

வஞ்சியரின் நடுவில் நான் ...

வளையல்களாய் என் மேல் மலர் வளையங்கள்..

வாட்டமான என் நெற்றியில்

வட்டமான ஒற்றை நாணயம் ..

வாழ்வெனக்கு நிர்ணயித்த விலையோ ?

வலப்பக்கத்தில் மனைவியும் மக்களும்

வரம்பு மீறிய குளிரில் freezer box...

வரிசையாக உறவினர்கள் , நண்பர்கள் .

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய

வார்த்தைகள் இன்னும் வசனம் மாறாமல் என்

வசம் உறைகின்றது...

வரவேண்டியவங்க எல்லாம் வந்தாச்சா ? - ஒருவர் வினவ

வண்டிக்காரன் , வெட்டியான் , சங்கு ஊதுபவன், வண்ணான்

வாரிசுகளுடன் பேரம் பேச

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது...

வசதியாகப் படுத்திருக்கிறேன் குளுமையில் . என்னை விட

வசதியாக என் மேல் படுத்துகிடக்கின்றது ஈ ஒன்று ..அதன் ரீங்கார ஓசையில்

வந்த என் அந்த நாளை சென்று பார்க்க விழைந்தேன் .அன்று அவள்

வலப்பக்கத்தில் சிறு

வாரிசாகக் கிடந்தேன் .

வந்த பந்தங்கள் அன்றும் சூழ்ந்தன .

வாய்விட்டழுத நொடிதோறும்

வாய்கொண்டு இட்டனர் முத்தம் ..

வயிற்றுப்பசி அறிந்து

வயிறோடனைத்து பால் ஊற்றினள் அன்னை .

வசந்த காலம் இன்று இறந்த காலமாய் ஆனது .

வரும் வாரம் காரியம். இன்றே உடன் பால் .

வயதில் மூத்தவர்கள்  அனைவரும் முடிவெடுத்தனர் .

வாங்க வேண்டிய சாமான்கள்

வாங்கியாச்சா ? வாங்க போனவங்க

வந்தாச்சா? இப்படிக்கு யாரோ ஒருவர் ..

வாழும் போதே -  இவன் நாட்களை எண்ணுகின்றான் என்று

வாழ்த்திய நெஞ்சமொன்று - சொன்ன வஞ்சப் புகழ்ச்சியணி

வந்ததோ ? - புவி சேர காத்திருக்கும் என் செவி அருகே

வந்து விழுந்தனவோ - வார்த்தைகள் ...

வரட்டிகள் - ஐந்நூறு

வாங்கியாகி விட்டதால் பெருமூச்சு  ..

வயிற்றெரிச்சல் எனக்கு ...

வரட்டி பிரச்னை பெரிதல்லவே ...

வட்டிக்கு வாங்கிய பணத்தை

வாரிசின் மீது ஏற்றிவிட்ட என்

வலியாரறிவார்.

வழி செல்லும் போதெல்லாம் என் எதிரில்

வருவாளாம் என் இல்லாள் .. இனி

வாழ்வெல்லாம் அவள் 'இல்லா'ள் .

வாழ்க பல்லாண்டு என அனுப்பினேன் அந்த

வரனுடன் என் மகளை ...

வாடாதே என் மகளே ..உன் வயிற்றில்

வருவேன் பிள்ளையாய் ...மீண்டு

வருவேன் பிள்ளையாய் ... மீண்டும்

வருவேன் பிள்ளையாய் !

வயதானவர்களுக்கும் , சிறார்களுக்கும்

வடையுடன் கூடிய இட்லி , சட்னி , சாம்பார்

வந்தது ..

வந்து போன சுவடே அறியாமல் என் போல மறைந்தே போனது .

வளமான முகம் கழுவி ... தலை

வாரி , பளீரென வலம் வந்த

வகையறாக்களும் அடங்கும் இங்கு ..

" வாப்பா தம்பி !!! " என் மகன் - என் வரம் , அவனை அழைத்து

வழியனுப்பும் படலத்தை துவக்கி வைத்தார் ஒருவர் .

வழி பார்க்க தொடங்கினேன் ... வலம்

வந்த நெய்ப்பந்தலால். அனைவருக்கும்  என் இதயம் கனிந்த

வருத்தங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் - ஒரு வேளை

வருத்தம் கொள்ளும் அளவிற்கு யாரிடமாவது நடந்திருந்தால் ... ஓ..

வண்டியில் ஏற்றுகிறார்கள் ... எங்கே போகிறது ?

வண்டி அல்ல - - - வாழ்க்கை ? ஏதோ ஓர் மூலையில்

"வாழ்வே மாயம் எனும் படத்தில் இருந்து

வாழ்வே மாயம் எனும் பாடல் " என்றது வானொலி .

வண்டி கட்டிக்கொண்டு செல்கிறேன் - கடைசிப் பயணம் இது .

வழி நெடுக மலர் மாலைகள் வீடு முதல் - காடு வரை .

வழி மறக்காமல் இருக்கவோ ?

வனப்பாக விரிந்து கிடக்கின்றது

வானம் . இனி நான்

வாழப் போகும் வீடு ...

வனம் சேர்ந்தேன் - ஒரு வழியாக . என்னோடு

வனம் வந்தவர்களை விரல் விட்டு எண்ணிப்பார்க்கிறேன் ..

வந்தவர்களை மனம் விட்டும் எண்ணிப்பார்க்கிறேன் ..

வரட்டிக்கட்டிலா இங்கே ??? அய்யகோ

வாய்விட்டு கூற முடியாதே

வசதியான freezer box தான் வேண்டுமென ...

வழிந்த கண்ணீரை பிழிந்து

வருத்தங்களை பதிவு செய்தான் பிள்ளை .

வான் நோக்கி எரிந்தது கொள்ளி... அவனால்

வாயார அழ முடியவில்லை . என் பெயர் சொல்லி ...

வந்த அனைவரும் என்னை விட்டுவிட்டு சென்றனர் ...

வலி...

வலி...

வலி...

வருத்தெடுக்கப்படுகிறேன்..

வதைக்கப்படுகிறேன் .

வாடித்தான் போகிறேன் ..

வவ்வால்களின் குரலிநூடே என் வலியின் குரலும்

வகை மாறாமல் சேர்ந்தது ... பின் திடீரென

வந்தது மழை .. சட சட வென - சுட சுடரென .

வாட்டசாட்டமான முகத்தில் , வழிந்த நீரை துடைத்தால் . கிணற்று

வாளியைப் பிடித்துக்கொண்டு , ஒரு காளியைப் போல் நின்ற தாய் சொன்னாள் .

வாளி நிறைய நீரூற்றினாலும்

வருமோ தூக்கமென ?? பின்னர்தான் ஓருண்மை உணர்ந்தேன்..

வந்தது நிஜமல்ல - கனவே ... ஆனால்

வாழ்வில் வரப்போகும் நிஜத்தின் நிழல் .. பின் என் திமிர் கெட்டு.

வானோக்கி -

வாய்திறந்து - கொட்டாவியுடன் சிரிக்க சிரிக்க கூறினேன்

நேற்று என் மரணம் 







மெல்லினம்

பூ
பறித்தது
பூ ஒன்று ...
பயம் எனக்கு ...
பூ இதழ்
பட்டு - எங்கே
பூ நகம்
ஒடிந்திடுமோ என்று  

சேமிப்பு

அனைத்து குப்பைகளை
கொட்டுகிறார்கள் ..
அகத்துக் குப்பைகளை
சேமிக்கின்றார்கள்

பூப்பிள்ளை

பிள்ளை
அழுதது... பூ வேண்டும் என ...
பறித்து தந்தேன்
பூப்பிள்ளையின்
அழுகை
கேளாமல் 

காதல் நீர்

தெருவோர நீர் பிடிக்கும் இடத்தில்
கண்களால்
காதலித்துக்கொண்டிருந்தோம்...
குழாயடியில்
கிடந்த
குடத்தில்
நிரம்பி வழிந்தது
காதல் 

தாலாட்டு ..

குண்டுச் சத்தங்கள் இல்லாமல்
எங்கள்
குழந்தைகள் இப்பொழுது
உறங்குவது இல்லை .... 

ஆறுதல் ...

உன் ஆறுதலுக்காகவே
ஆசைப்படுகிறேன்
அனு தினமும்
அழலாமென்று...

நட்பூ...

நாவினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நட்பினால் சுட்ட வடு ... 

திருக் கோலம் ...

மனத் தூய்மை
கொண்டு தூவினாள் வெண்மைத் துகள்களை ...
மூக்குத்தியோ
மூங்கில் தோளின் மச்சமோ புள்ளிகளாய் ..
தன் வளைவுகள் கொண்டு வரைந்தாள்
வளைவுகளை ...
உன்னை கண்ட தருணத்தில்
என்னில் தோன்றிய எண்ணங்களை
வண்ணங்களாய் கொண்டு
வரைந்து முடித்தாய்
வாசல் கோலம்
ஒன்றை...

Tuesday, July 24, 2012

..ம்மா !!

மீண்டு பிறந்தது
சேய் ...
மீண்டும் பிறந்தாள்
தாய் ...

பயம்

கனா கண்டேன் ...
வாழ்வது போல்...
பயத்தில் கலைந்தது
கல்லறைத் தூக்கம்